வேலூர், ஜூன் 28 –
சென்னையிலிருந்து சாய் நகர் சீரடி விரைவு ரயிலில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தமிழக முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காட்பாடியில் இருந்து வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் திமுகவினர் மேல தாளங்களுடன் முதல்வரை மலர் தூவி வரவேற்றனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார்.
பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் வேலூரில் ரூபாய் 197 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழக
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி,
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



