மார்த்தாண்டம், செப். 9 –
களியக்காவிளை அடுத்த குழி விளையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார மாதா ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மத ஒற்றுமையை பேணும் பொருட்டு அருகில் உள்ள பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த முத்தாரம்மன் கோவிலில் இருந்து பேராலயத்தில் ஏற்றுவதற்கான கொடி அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரு மத மக்களும் ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்து வந்து ஆலயத்தில் முகப்பில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்றத்தின்போது ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கை வெடித்து கொண்டாடினர்.
உலகத்தின் பல பகுதிகளில் மதத்தின் பெயரால் மத மோதலும் போர்களும் வெறுப்பும் நிலவி வரும் இந்த காலத்தில் அன்பு சகோதரத்துவத்தை மேம்படுத்த மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் மத ஒற்றுமைக்கான முதல் தோற்றம் இந்தியாவில் இருந்து தான் துவங்கும் என கூறியதை நினைவு கூர்ந்து தாங்கள் இப்படி செய்ததாகவும் அன்பு, சகோதரத்துவத்தை இந்த பகுதியில் நிலைநிறுத்த இந்த முயற்சி மேற்கொண்டதாகும் என இரு மதத்தை சேர்ந்த நிர்வாகிகளும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அனில் குமார், பொருளாளர் மனோகரன், து.தலைவர் சதி, து.செயலாளர் ராஜன், ஆலய பங்குதந்தை சிறில் மிஸ்மின், துணை தலைவர் லூக்கோஸ், செயலாளர் அனிதா, துணை செயலாளர் அனி மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



