கன்னியாகுமரி, மார்ச் 4 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்படாததால் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் கணபதி ஹோமமும், நவகலச பூஜையும், அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினார்.
வருஷாபிஷேகத்தை ஒட்டி வைரக்கல் மூக்குத்தி வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.



