கன்னியாகுமரி, ஜன. 13 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி மற்றும் காந்தி மண்டபம் பகுதிகளில் நடைபாதை மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குமரி மாவட்ட திருக்கவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி அறிவுரையின் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு நகராட்சி மற்றும் காவல்துறையுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்தந்த கடைகளில் உள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன் வந்து தங்களது கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தவிர நகராட்சி பணியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பணியாளர்களும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



