நாகர்கோவில், மே 21 –
குமரி மாவட்ட தாட்கோ திட்டம் மூலம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட காயல்கரை மற்றும் கீரிப்பாறை மலைவாழ் பழங்குடியின பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின்கீழ் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட புரையிடம் பகுதியில் 7 வீடுகளும், பெருங்குருவி பகுதியில் 4 வீடுகளும், செறுகிடத்துக்காணி பகுதியில் 11 வீடுகள் மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட கீரிப்பாறை மலை பகுதியில் 15 வீடுகளும், காயல்கரைமலை பகுதியில் 12 வீடுகளும், அம்புடிஞ்சான்மலை பகுதியில் 5 வீடுகளும், வெக்காலிமூடுமலை பகுதியில் 24 வீடுகளும், மூக்கரைக்கல் பகுதியில் 22 வீடுகள் என மொத்தம் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு கட்டப்படவுள்ளன. தலா ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 73 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட காயல்கரை மற்றும் கீரிப்பாறைமலை பகுதிகளில், பழங்குடியின மக்களுக்காக தாட்கோ நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் அஸ்திவார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமேன துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். உடன் அதிகாரிகள் பங்கேற்றனர்.



