குளச்சல், ஆக. 22 –
குமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
கடியபட்டணம் புனித பேதுரு பவுல் ஆலயம் முன்பிருந்து திரளான பெண்கள் உள்பட மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலுயுறுத்தி கைகளில் பதாகைகள் ஏந்தி மற்றும் கோஷமிட்ட பேரணி சென்றனர். பேரணி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக பஸ் ஸ்டாண்டு சென்று பின்னர் கடற்கரை மைதானம் சென்றடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பங்கு பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். பங்கு நிர்வாக குழுவினர் முன்னிலை வகித்தனர். குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
முட்டம் மறை வட்ட முதன்மை பணியாளர் சகாய சீலன் ஸ்டான்லி மற்றும் போராட்டக்குழு உறுப்பினர்கள் முட்டம் சுந்தர், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை பெர்லின், அருளானந்தம், ஜெயசந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இணை பங்கு பணியாளர் ஜிம்சன், ஊர் துணைத்தலைவர் அருள்தாஸ், செயலாளர் பாப்டிஸ்ட், பொருளாளர் லெஸ்லின், தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் மரிய தாசன், சகாயராஜ், அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



