புதுக்கடை, ஜன. 13 –
தேங்காப்பட்டணம் துறைமுக நடுக்கடலில் பெரிய கப்பல் ஒன்று மோதியதில் மூன்று நாட்டுப் படகுகள் முற்றிலுமாக சேதமடைந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ விசாரணைக் கூட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணைக்கு தூத்துக்குடி மெர்கன்டைல் மரைன் துறையின் பொறுப்பு சர்வேயர் ஆர்.ஆர். சுப்பாராவ் தலைமை தாங்கினார். மற்றும் எம்.எம்.டி அதிகாரிகள், புதுக்கடை காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவச் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, மீனவர்கள் தரப்பு பிரதிநிதி மெஜில் மற்றும் பங்கு பணியாளர் சர்ச்சில் ஆகியோர் விபத்து நடந்த விதம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த விபத்தினால் படகு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார இழப்புகள் குறித்தும், வணிகக் கப்பல்களின் போக்குவரத்தால் பாரம்பரிய மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விளக்கினார்கள். இந்த சம்பவத்திற்கு காரணமான கப்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மீனவ சமுதாயத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு யார் பொறுப்பு? என்பதை நிர்ணயிக்கவும் முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக ஆர்.ஆர். சுப்பாராவ் தெரிவித்தார். மேலும், இது குறித்த விரிவான அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள எம்.எம்.டி தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடலில் மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உறுதியுடன் விசாரணை நிறைவடைந்தது.



