கிருஷ்ணகிரி, ஜுலை 14 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள் மற்றும் ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஒசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.
ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ. தூரத்திற்கு ரூ.12 கோடியே 80 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் ஆண்டுத் திட்டம் 2024-25-ன் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைப் பணியானது தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையில் நடைபெற்று வரும் சிறுபாலங்கள், சாலை ஓர வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலைப்பணிக்கு இடையூறாக உள்ள சாலை ஓர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைவாக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டாட்சியருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதே போல ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினால் சாலைப்பணியானது தாமதப்படுவதால் விரைவாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஓசூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் தற்காலிகமாக கார், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பழுது நீக்கம் பணிகளை விரைந்து முடிக்கவும், அதே போல சிப்காட் ஜங்சன் பகுதில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளும் விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலையை உதவிக் கோட்டப் பொறியாளர் சே.வே. பத்மாவதி, உதவிப் பொறியாளர் ச. நிவேதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பி. சுந்தரபாண்டியன், கே. சித்தேஸ்வரன், ஓசூர் வட்டாட்சியர் கு. குணசிவா மற்றும் காவல்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.