விழுப்புரம், ஆகஸ்ட் 08 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலை மேம்படுத்தும் பணிகள், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள், பணிகளின் தரம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் விவரங்கள் கேட்டறியப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை பணிகள், மாநில நெடுஞ்சாலை பணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாவட்டங்களில் புதியதாக மேற்கொள்ள உள்ள சாலை பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும், மாவட்டங்களில் நாபார்டு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைபணிகள், முதலமைச்சரின் சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பணிகளின் விவரங்களை கேட்டறியப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமான முறையில் குறித்த காலத்திற்குள் முடித்திட சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்திட வேண்டும்.
புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வரும் இடங்களில் சாலை விபத்துக்கள் நடக்காதவாறு தகவல் பதாகைகள் அமைத்திட வேண்டும். மேலும், சர்வீஸ் சாலைககள் அமைத்து விபத்து நடப்பதை தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலை) ராஜகுமார், விழுப்புரம் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் உத்தண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.