ஈரோடு, ஆக. 3 –
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே. எம். மயிலானந்தன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். வி. சி. சந்திரகுமார் எம். எல். ஏ முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் இந்த புத்தக திருவிழா நடந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் முன்னுரிமை கொடுத்து பல திட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இயக்கத் தலைவராக இருந்த போது கட்சி நிர்வாகிகளிடம் எனக்கு சால்வை பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டாம்
அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் என்று கூறினார். இந்த ஏற்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவருக்கு நிர்வாகிகள் புத்தகங்கள் கொடுத்து வருகிறார்கள். இதை மாணவர்களுக்கு அவர் கொடுத்து வருகிறார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முன்பு மிக மோசமான நிலையில் இருந்தது . அதை சுத்தப்படுத்தி இந்த இடத்தில் முதலமைச்சர் உத்தரவுபடி அங்கு தலைவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர் கூறியபடி சிலைகளுக்கு கீழே உள்ள இடத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் பொது நூலகம் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் போட்டி தேர்வுக்கான நூலகமாகவும் செயல்படுகிறது.
இதுபோல ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் கள்ளிப்பட்டியிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்படும் நூலகத்தில் படித்த 12 மாணவ மாணவிகள் என்னிடம் இந்த நூலகத்தில் படித்த நாங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் பணியாற்றுகிறோம் என்று கூறினர். இது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நூலகத்தில் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதி மட்டுமல்லாமல் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் விரைவில் இரண்டு போட்டித் தேர்வுக்கான நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் அர்பித் ஜெயின், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், சேது சொக்கலிங்கம், மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) சாமிநாதன் நன்றி கூறினார்.