ஈரோடு, ஜூலை 19 –
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3, வார்டு எண் 44, காந்திஜி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம், பணியாளர்கள் விபரம், தினசரி உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் விபரம், தினசரி உணவு பட்டியல், உணவு விற்பனை விலை விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவகத்தில் உணவு உண்ண வருகை தந்த பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மண்டலம் -3, வார்டு எண் – 44. காந்திஜி ரோடு பகுதியில் உள்ள 30-இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை நேரில் பார்வையிட்டு குடிநீர் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் குளோரின் அளவு, பயன்பெறும் மொத்த குடியிருப்புகள் விபரம், குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே அழுத்தத்தில் செல்கிறதா என்று அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
சோலார் பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு நாய்களுக்கான சிகிச்சை முறைகள், மருத்துவ கருவிகள், சிகிச்சை வசதி, நாய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பணியாளர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சோலார் பகுதியில் இயங்கி வரும் அட்சயம் அறக்கட்டளையில் ஆய்வு மேற்கொண்டு மறுவாழ்வு பெற்ற யாசகர்கள் விபரம், முதியோர்கள் பராமரிப்பு முறை, படுக்கை வசதி, அடிப்படை வசதிகள், உணவு பட்டியல் முறை, மருத்துவ வசதிகள், அவசர கால பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு முதியோர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளில் மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.