ஈரோடு, மே 18 –
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பெருமாள் என்கிற செல்லதுரை (35). இவர் தனது மனைவி பாரதி (32) மற்றும் இரண்டு மகன்களுடன் பரமத்திவேலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார். இவர்கள் உறவினர்களான இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பிரதீபா (21) மற்றும் ஸ்ரீமதி ஆகியோருடன் சேர்ந்து ஆறு பேர் ஈரோடு மாவட்டம் பாசூர் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆற்றில் இறங்கி கைகோர்த்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பிரதீபா ஆற்று நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவர் மற்றவர்களையும் இழுக்கவே நால்வரும் நீரில் தத்தளித்துள்ளனர். கரையில் இருந்த பெருமாள் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் ஆற்றில் விழுந்துள்ளார்.
ஸ்ரீமதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களும் மீனவர்களும் ஆற்றில் தத்தளித்த ஸ்ரீமதி மற்றும் இரண்டு சிறுவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஆற்று நீரின் அடிப்பகுதியில் இருந்த மீன்பிடி வலையில் சிக்கியதால் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனவர்களின் உதவியோடு உயிருடன் மீட்கப்பட்ட பாரதி மற்றும் மாணவி பிரதீபா ஆகிய இருவரையும் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்டம் மொளசி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த ஆம்புலன்சில் அவசர கால ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தால் வழியிலேயே பிரதீபா மற்றும் பாரதி இரண்டு பேரின் உயிரும் பரிதாபமாக பிரிந்தது.
மீன்பிடி வலையில் சிக்கியும் ஆம்புலன்சில் ஆக்சிஜன் இல்லாமலும் தம்பதி மற்றும் கல்லூரி மாணவி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



