நாகர்கோவில், ஜுலை 01 –
ஈரானில் சிக்கி தவித்த தமிழர்கள் 22 பேரை பத்திரமாக மீட்டு வந்தமைக்கு ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிப்பதாக அதன் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் – இஸ்ரேல் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேச முடியாமலும் துன்பங்களுக்கு ஆளாகி இருந்தனர். அவர்களை பத்திரமாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று முதலமைச்சருக்கு பலரும் கோரிக்கை விடுத்திருந்தது. அகில இந்திய தமிழர் கழகம் சார்பிலும் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒன்றிய அரசு முதல்கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீன்பிடி தமிழர்களை மீட்டு வந்துள்ளனர். இதே போன்று இன்னமும் 600 க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும். அதே சமயம் முதல் கட்டமாக 22 மீனவர்களை மீட்டு வந்த ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.