இரணியல், நவ. 4 –
தக்கலை அருகேயுள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (36) லாரி டிரைவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லை. கடந்த 1-ம் தேதி கிருஷ்ணதாஸ் தோட்டியோடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள கல்குவாரியில் உள்ள கட்டிடம் அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் குளச்சல் ஏ.எஸ்.பி ரேகா, ஆர். நங் லெட் மற்றும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணதாஸ் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கால்வாயில் கிடந்த கிருஷ்ணதாஸின் பைக்கை மீட்டனர்.
இது குறித்து கிருஷ்ணதாஸ் தாயார் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கடைசியாக திருவிடைக் கோடு பகுதி சேர்ந்த ரமேஷ், விமல் ஆகியோர் கிருஷ்ணதாசுடன் இருந்த தகவல் போலீசருக்கு கிடைத்தது. போலீசார் தேடிய போது ரமேஷ், விமல் செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கிருஷ்ணதாசின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் கண்காணித்து வந்தனர். மேலும் 2 நாட்களாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பவித்ராவின் தம்பியின் நண்பர் ரமேஷ் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு நாள் வீட்டில் ரமேஷ் உடன் உல்லாசமாக இருந்ததை வீட்டிற்கு திடீர் என வந்த கிருஷ்ணதாஸ் பார்த்ததால் பிரச்சனை ஏற்பட்டது.
கள்ள காதலுக்கு கணவர் இடையூறு என்பதால் பவித்ராவின் தாய் முத்துலட்சுமி உதவியுடன் ரமேஷ், அவரது நண்பரான கூலி தொழிலாளி விமலுடன் சேர்ந்து மது வாங்கி கொடுத்து சம்பவ தினம் கிருஷ்ணதாசை கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து இரணியல் போலீசார் பவித்ரா அவர் தாயார் முத்துலட்சுமி ஆகியவரை கைது செய்தனர். தொடர்ந்து தலை மறைவாக உள்ள ரமேஷ் மற்றும் விமல் ஆகியோரை தேடி வருகின்றனர்.


