நாகர்கோவில், மார்ச் 7 –
இரணியல் அடுத்த கட்டிமாங்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவரது மனைவி சோபி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன. 4 வயதில் ஒரு மகன் மற்றும் தற்போது 2 மாதங்களுக்கும் முன்பு பிறந்த பெண் குழந்தை ஆகியவை உள்ளது. பெண் குழந்தையை கவனிப்பதற்காக சோபியின் தாயார் லதா (55) என்பவர் கடந்த ஒரு மாதமாக மகள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு சோபி படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அதன் பின்னர் சோபி நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை. இதை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சோபி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சோபி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோபி தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
அவரது இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என அவரது தாயார் கூறியுள்ளார். இருப்பினும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆகி இருப்பதால் குளச்சல் ஏஎஸ்பி ரேகா ஆர். நங்குலட் விசாரணை நடத்தி வருகிறார்.


