நாகர்கோவில், ஜன. 21 –
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களும் அவற்றுக்குட்பட்ட 33 காவல் நிலையங்களும் உள்ளன. இதில் சில காவல் நிலையங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கொண்ட காவல் நிலையங்களாக உள்ளன. அதாவது இன்ஸ்பெக்டர் பொறுப்பு இல்லாமல் எஸ்ஐ தலைமையில் இயங்கும் காவல் நிலையங்கள் ஆகும். இந்த காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தான் பொறுப்பு இன்ஸ்பெக்டராக இருப்பார். முக்கிய காவல் நிலையங்கள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையங்களாக இருந்ததால் வழக்கு விசாரணையில் தோய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 280 சர்க்கிள் காவல் நிலையங்களை தனி இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென்தாமரை குளம், அஞ்சுகிராமம், கொற்றிகோடு, பளுகல், கடையாலுமூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்களில் தனி இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் அஞ்சுகிராமத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது ஆசாரிபள்ளம் காவல் நிலையத்திற்கு சென்னை வண்ணாரப்பேட்டை க்ரைம் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த முத்தையா என்பவரை ஆசாரிப்பலாம் காவல் நிலையத்திற்கு நியமனம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.


