திருவள்ளூர், செப். 15:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள RO குடிநீர் இயந்திரம் செயல்படாமல் இருப்பதால், குடிநீருக்காக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள தனியார் கடைகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் குடிநீருக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், குடிநீர் வசதி முறையாக இல்லாதது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு குடிநீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
எனவே, செயல்படாமல் உள்ள RO குடிநீர் இயந்திரத்தை உடனடியாக சீரமைத்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாப்பான குடிநீர் கிடைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குடிநீர் வசதி எப்போது சீராகும்? நோயாளிகளின் அவதி எப்போது தீரும்? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



