நாகர்கோவில், மார்ச் 3 –
அய்யா வைகுண்டர் விடுதலையாகி சாமிதோப்பு சென்றதை நினைவுகூறும் விதமாக திருவனந்தபுரத்திலிருத்து சாமிதோப்பிற்கு வாகன பவனியாக திருஏடு எடுத்து சென்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு விதிக்கப்பட்ட முலைவரி, மீசை வரி உட்பட பல்வேறு வரிகளுக்கு எதிராக போராடியதற்காக அய்யா வைகுண்டரை திருவிதாங்கூர் மன்னரான சுவாதித் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1838 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சிறையிலடைக்க உத்தரவிட்டார் தொடர்ந்து குதிரையின் கால்களில் பூட்டப்பட்டபடி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு அய்யா வைகுண்டர் திருவனந்தபுரம் சிறையிலடைக்கபட்டார். பின்னர் 110 நாட்களுக்கு பிறகு 1839ம் ஆண்டு விடுதலையான அய்யவைகுண்டர் சிங்காரதோப்பு பகுதியிலிருந்து சாமிதோப்பிற்கு திரும்பினார்.
இதை நினைவுகூறும் விதமாகவும் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளதையொட்டியும் திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து அய்யா வழிபக்தர்கள் அலங்கரிக்கபட்ட பல்லக்கு வாகனத்தில் திருஏடு எடுத்தவாறு வாகன பவனியாக சாமிதோப்பிற்கு புறப்பட்டனர். திருவனந்தபுரம் முதல் சாமிதோப்பு வரை நடைபெற்ற பவனியில் வழியெங்கிலும் திருஏட்டிற்கு அய்யாவழி பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் இருந்து சாமிதோப்பு நோக்கி புறப்பட்ட ஊர்வலத்திற்கு முருகேசன் தலைமை தாங்கி தாங்கினார். அன்புவனம் நிர்வாகி ஆர்.தர்ம ரஜினி, சீடர் விஜயராகவன் ஆகியோர் திருஏட்டினை எடுத்துக் கொடுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் ஹரி கிருஷ்ணன், தர்மமணி, பரமேஸ்வரன் நாடார், வினோத் ஆதி உட்பட பலர் கலந்து கொண்டு அய்யாவின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சுவாமி தோப்பு சென்றனர். அய்யாவழி சமயத்தலைவர் பால பிரஜாபதி அடிகளார் ஊர்வலத்தை வரவேற்றார்.



