நாகர்கோவில், ஜூன் 28 –
கன்னியாகுமரி தொகுதி, தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட உதிரம்பட்டி – வடகரை பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தவறியதால் இப்பகுதி மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவர்களின் துயர் நிலை அறிந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிட்டத்தட்ட 80 குடும்பங்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த கிராம மக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இருந்து வருகிறது. சாலைகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் என அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பற்று கிடக்கிறது.
ஒட்டுமொத்த கிராமமும் அடிப்படை சுகாதார வசதிகள் எதுவுமில்லாமல் சரியான கழிவு மேலாண்மை இல்லாமல் இருக்கிறது. அந்த ஊர் வழியாக செல்லும் பழையாறானது குப்பை குவியல்களாக காட்சியளிக்கிறது. சரியான சாலை வசதிகள் இல்லாததால் இவ்வூர் மக்கள் பேருந்து நிலையத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை இருக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தில் ஆஸ்டின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்டப்பட்ட நூலகம் ஒன்று இன்னும் திறந்து கூட வைக்கப்படாமல் வெற்று கட்டிடமாக பயனற்று கிடக்கிறது.
ஆதித்தமிழ்குடி மக்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் இதுபோன்று கண்டுகொள்ளப்படாமல் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் பின்தங்கிய நிலையிலேயே வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு முழுவதும் வழக்கமாக பார்க்கும் காட்சியாக இருக்கிறது.
வாக்கு வங்கிகளாக மட்டுமே இம்மக்களை கருதி வெறும் ஓட்டரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பது தான் ஆண்ட மற்றும் ஆளும் திராவிட கட்சிகளின் யுக்தியாக இருக்கிறது.
இத்தகைய கிராமங்களை பார்க்கும்போது உள்ளாட்சித் துறை என்பது மக்களுக்கானதா என்ற சந்தேகம் தான் எழுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் என்பது அந்த மக்களிடமிருந்தே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அதிகாரமற்றவர்களாகவும் மக்களுக்காக செயல்படாத நிலையில் கண்காணிகளாக வைத்திருக்கும் நவீன அடிமை முறையோ என்ற எண்ணம் எழுகிறது.
உள்ளாட்சி தேர்தல்களும், அதன் நிர்வாக செயல்பாடுகளும், நம் மக்கள் தங்கள் சொந்த விரல்களாலே தங்கள் கண்களை குத்திக் கொள்ள செய்யும் திராவிட சூழ்ச்சியாகவே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கான தீர்வை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என கிராம மக்களிடம் உறுதியளித்திருக்கிறோம்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்து தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இக்கிராம மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறும் வரை அவர்களோடு துணை நிற்போம் என உறுதியளித்துக் கொள்கிறேன்.