ஈரோடு, செப்.11:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் நீரில் கரைத்தல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், விநாயகர் சிலைகள் நிறுவத் திட்டமிடும் பொறுப்பாளர்கள், சிலை வைக்கப்படவுள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தால் நில உரிமையாளரிடமும், அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும் தடையின்மைச் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒலிபெருக்கி அமைக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும்போது தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். தற்காலிக மின் வசதி பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சுத்தமான களிமண்ணால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கக் கூடாது. தற்காலிக பந்தல்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் அமைக்கப்படக் கூடாது என்பதுடன், பொதுமக்கள் பந்தலுக்குள் சென்று வழிபட்டு பாதுகாப்பாக திரும்பும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சிலை அமைப்பாளர்கள் பந்தலில் போதிய முதலுதவி உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பந்தலுக்கு அருகில் வைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட துறைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் அவற்றை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



