கோவை | செப்.17:
செரையம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து பேசிய அவர், “ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது. குறிப்பிட்ட கட்சி மீது குற்றச்சாட்டு இருந்தால், கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். தலைவர் விஜய் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்; அதற்கு மக்கள் பதில் சொல்வார்கள்” என்றார்.
மேலும், “விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களது முக்கிய நோக்கம்” என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், கவுண்டம்பாளையம் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்றும், இறுதியில் மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தங்களது முடிவுகளை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.



