சேலம், அக். 1:
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தரமாகவும், உரிய காலக்கெடுவுக்குள்ளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன் கோவில் பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய சுகாதார மையப் பணிகளையும், இருப்பாளி ஊராட்சி மூலக்கடை பகுதியில் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ.9.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொது பண்ணைக் குட்டை பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், அதே பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் கொய்யா, நெல்லி, வேம்பு, வாகை உள்ளிட்ட சுமார் 30,700 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார். பக்கநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, கற்றல் திறன், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், குழந்தைகளின் எடை மற்றும் உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பக்கநாடு விழா நியாய விலைக் கடையில் பொது விநியோகப் பொருட்களின் இருப்பு, தரம், எடை, விற்பனை விவரங்கள், பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நியாய விலைக் கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து பக்கநாடு சக்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, உரம் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பக்கநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், குழந்தைகள் பிறப்பு பதிவேடு மற்றும் மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய காலக்கெடுவுக்குள்ளும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது எடப்பாடி வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



