திருச்சி, ஜூலை 31 –
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் கிராமத்தில் உள்ள துரைசாமி அய்யனார் கோவில் வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி பேசியதாவது: மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது.
அரசுத் துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடனுதரவிகள், மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக, ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் சுயஉதவிக் குழுப் பெண்கள் இன்று தொழிலமுனைவோராக உருவெடுத்துள்ளனர். இளைஞர்கள் தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமும் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இம்முகாம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 155 மனுக்களும், முகாம் நாளில் 55 மனுக்களும் என மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் இணையத்தில் பதியப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தி, தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் லால்குடி வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உட்பட வருவாய்த்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி ஸ்டால்களை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட 302 பயனாளிகளுக்கு, 91 லட்சத்து 14 ஆயிரத்து 326 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.



