சென்னை, செப். 25 –
கடுமையான மரபணு கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 8 வயது குழந்தைக்கும் மேலும், கடுமையான கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 7 மாதத்திற்கும் குறைவான இரண்டு குழந்தைகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் மூத்த குழந்தை கல்லீரல் மருத்துவர் டாக்டர் சோமசேகரா ஆகியோரின் தலைமையில், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா கோபால் , குழந்தை இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் ஆலோசகர் டாக்டர் கீர்த்திவாசன், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகர்களான டாக்டர்கள் கார்த்திக் நாராயணன், நடராஜ் பழனியப்பன் , மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் சந்தர், செவிலியர்கள் மற்றும் இம்மருத்துவமனை ஊழியர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் நேரடி கல்லீரல் தானம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வரலாற்றில் இம்மருத்துவமனை இடம் பிடித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன், மிகவும் அரிதான மரபுவழி கல்லீரல் பிரச்சினையான உள்-ஹெபடிக் கொலஸ்டாசிஸ் வகை 13 என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவரது தாயிடமிருந்து சரியான நேரத்தில் பெறப்பட்ட உறுப்பு தானத்தால் அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. மேலும் வழக்கமாக பள்ளிக்கு சென்று வருகிறது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழு மாதக் குழந்தைக்கு, குழந்தைப் பருவத்திலேயே கடுமையான கல்லீரல் நோய் ஏற்பட்டதால், அவரது தந்தை உறுப்பு தானம் வழங்கிய நிலையில், 11 மணி நேர மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து மாதக் குழந்தைக்கு, கல்லீரல் தானம் மூலம் பெறப்பட்டு 14 மணி நேர மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.
இது குறித்து மூத்த குழந்தை கல்லீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சோமசேகரா கூறுகையில்: குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்தில் மிகவும் முக்கியமான மற்றும் சவாலான ஒன்றாகும். ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் எங்கள் நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புடன் 3 அரிய கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளோம். பெற்றோரின் ஆதரவுடன் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதை பார்ப்பது உண்மையிலேயே மனதைத் தொடுவதோடு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. கல்லீரல் பராமரிப்பு சிகிச்சை அளிப்பதில் ரெயின்போவின் நவீன மருத்துவ நுட்பத்தை இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.



