போகலூர், அக். 16 –
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே தற்போது தீபாவளியை முன்னிட்டு கூட்டம் அலைமோதுகிறது. இங்குள்ள கடை ஊழியர்கள் ரோட்டை மறித்துக்கொண்டு வாகனங்களை நிறுத்தி ஆட்களை இறங்கச் சொல்லி கடைக்கு அழைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட நேரம் நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நிற்கும் அவல நிலை உருவாகி வருகிறது. தனியார் நிறுவனத்திற்காக ரோட்டை ஆக்கிரமித்து செயற்கையாக போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



