சென்னை, ஜூலை 30 –
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய கார்களுக்கு கடன் வழங்கும் தனது வாகனக் கடன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
வங்கியின் பாதுகாப்பான கடன் சேவைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வாகனக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக இந்த கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சொந்த வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சென்னை, தமிழ்நாட்டின் வாகனச் சந்தைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.
வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்கவும், நகரத்தில் உள்ள வாகன விற்பனையாளர்களுடன் நல்லதொரு கூட்டாண்மையை ஏற்படுத்தவும், வேளச்சேரி, அண்ணா நகர், போரூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், முகப்பேர், மயிலாப்பூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட சென்னையில் உள்ள தனது 9 கிளைகள் மூலம் இந்த கடன் வசதியை வங்கி வழங்க உள்ளது.
இந்த அறிமுகம் குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாகனக் கடன் பிரிவின் வணிகத் தலைவர் பிரேம்குமார் கூறுகையில், ‘வாகனங்களுக்கான சிறப்பான சந்தை மற்றும் சொந்த வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள சென்னை, எங்களது வாகனக் கடன் வணிகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. வலுவான கிளை நெட்வொர்க் மற்றும் டீலர் கூட்டாண்மையுடன், சென்னையில் இருசக்கர வாகனம் அல்லது பழைய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் அவர்களது தேவைக்கேற்ற கடன்களை விரிவுபடுத்த எங்கள் வங்கி தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.


