ஈரோடு, அக். 8
ஈரோட்டில் உள்ள கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
என்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மற்றும் ஷெர்வராய் ஸ்டெல்லர் ரிசார்ட், ஏற்காடு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட இயற்கை உணவுப் பொருட்களை காட்சிப்படுத்திய சாதனை முயற்சிக்காக பேராசிரியர்கள் டாக்டர் விஜயராகவன் மற்றும் டாக்டர் மோனிஷா ஆகியோர் பாராட்டப்பட்டனர். மேலும், இயற்கை மருத்துவம் தொடர்பான “நாபிப் பரிக்ஷா” நூலை வெளியிட்ட டாக்டர் விஜயராகவனும் கௌரவிக்கப்பட்டார்.
12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவி தர்ஷனாவுக்கு கல்விச் சிறப்பை பாராட்டி பொற்காசு வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி நிர்வாகிகள், அறங்காவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.



