திருப்பூர், ஜூலை 27 –
திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள குமரன் கல்லூரி பகுதியில், தினசரி மாலை 3 மணி அளவில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் விதிமுறைகளை மீறி கூட்டமாகச் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன.
மாணவர்கள் சிறைபிடிப்பு:
மாலை நேரத்தில் குமரன் கல்லூரி முன்பாக விதிகளை மீறி நிறுத்தப்படும் இந்த மினி பஸ்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அரசு இலவச பேருந்துகளில் செல்லக் காத்திருக்கும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி, தங்கள் மினி பஸ்களில் ஏறுமாறு அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு பேருந்துகள் வராத அவலம்:
குறிப்பாக மாலை 3:00, 3:10, 3:20 மணி ஆகிய குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட வேண்டிய அரசு டவுன் பேருந்துகள் சரிவர வருவதில்லை. இதன் காரணமாகவே மாணவ-மாணவிகள் இலவசப் பேருந்து வசதியைப் பயன்படுத்த முடியாமல், மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்குவதில்லை:
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான மினி பஸ்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பர்மிட் வழித்தடங்களில் செல்வதில்லை. மாறாக லாபம் தரும் மத்திய பேருந்து நிலையம், கோவில் வழி, புதிய பேருந்து நிலையம் ஆகிய மூன்று முக்கியப் பேருந்து நிலையங்களை இணைக்கும் மெயின் ரோடுகளிலேயே தொடர்ந்து வட்டமடிக்கின்றன. இதனால் உட்புறப் பகுதி மக்களுக்கு மினி பஸ் சேவை முழுமையாகக் கிடைப்பதில்லை.
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:
இது தவிர, மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணக் கொள்ளையும் தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்துப் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறை ஆகிய துறையினர் ஒன்றிணைந்து, மினி பஸ்களின் கட்டண விவரங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்த விபரப் பலகையை பஸ்களில் காட்சிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், விதிமீறலில் ஈடுபடும் பஸ்கள் மீது தொடர் கண்காணிப்பு நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.



