நாகர்கோவில், ஜூன் 9 –
நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள குடிநீர் கழிவு நீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி சாலை வழியாக வெளியேறி குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியினர் பெறும் அவதிக்கு உள்ளாயினர். இச்சம்பவம் அறிந்த மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சில்லதா உடனடியாக உடைப்பை சரி செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்பகுதியில் ஏற்பட்டிருந்த கழிவு நீர் செல்லும் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சிலதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குடிநீரின் தரம் மற்றும் நீர் வெளியே கொண்டு செல்லும் குழாய்களின் உறுதித்தன்மை போன்றவைகள் கேட்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் இப்பகுதியில் அதிகளவில் நீர் வெளியேறுவதால் பாம்பு,தவளை, எலி போன்றவைகள் தங்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் வருவதாக தெரிவித்து கழிவுநீர் செல்லும் ஓடையை உயரமாக்கி தரும்படி மேயரிடம் கேட்டுக் கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மேயர் உடனடியாக இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.



