புதுக்கடை, அக். 10 –
புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊற்றுக்குழி பகுதியில் மயிலாடும்பாறை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறிய அளவிலான ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான கோயில் என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த கோவிலில் வழக்கமாக மக்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் இந்த கோயில் விவகாரத்தில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் சிலையை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை அடுத்து கடந்த விஜயதசமி தினமன்று கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மறுபடியும் அந்த கோவிலில் பூஜை மற்றும் பஜனை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு புதுக்கடை போலீஸ் அனுமதி வழங்கவில்லை.
விஜயதசமி தினமான அந்த நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதை அடுத்து இன்று 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்த போலிஸ் அனுமதி வழங்கியது. இதையடுத்து அந்த இடத்தில் இன்று காலை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மயிலாடும்பாறையில் கோயிலில் சென்று பூஜைகள் நடத்தினர். கூட்டாலுமூடு கோவில் மேல்சாந்தி தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பஜனையும் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் சந்திரகுமார், பாரதிய ஜனதா ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் குமார், பைங்குளம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் விஜயராணி மற்றும் கோவில் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், விஜு உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். பூஜை, பஜனைகளுக்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.



