கன்னியாகுமரி, ஆக. 26 –
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் பொதிகை படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் அந்த படகை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கடல்வழியாக கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ரூ.10 லட்சம் செலவில் இந்த படகு சீரமைப்பு பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த பணியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த படகு பழுது பார்க்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு அங்கு இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகு அந்த படகு விரைவில் கடலில் வெள்ளோட்டம் விடப் பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. பழுது பார்க்கும் பணி ஓணம் பண்டிகைக்கு முன்பு முடிக்கப்பட்டு ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக இயக்கப்பட உள்ளது.



