சிவகங்கை, ஆக.31.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி, காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இங்கு 60-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றியபோது தங்களுக்கு உரிய ஊதியம் சரியான தேதியில் வழங்கப்பட்டதாகவும், தற்போது SKC ஒப்பந்ததாரர் மூலம் ஊதியம் வழங்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதுடன், ஊதியத்திலும் குறைபாடுகள் இருப்பதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், குப்பைகளை சேகரித்து செல்லும்போது சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். பணி நிரந்தரம், ஊதியத்தை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக வழங்குதல், வாகனங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகம் முன்பு தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பணிபுரியும் அரசு அலுவலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்கிடையே, தூய்மை பணியாளர்களை அரசு உத்தரவின்படி உரிய பெயரில் அழைக்க வேண்டும் என்ற நிலையில், அதிகாரி ஒருவர் அவர்களை தொடர்ந்து “துப்புரவு பணியாளர்கள்” என பொதுவெளியில் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
போராட்டத்தை முன்னிட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



