நாகர்கோவில், மே 21 –
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 14 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களில் பெரும்பாலும் குடிநீர், கழிவுநீர் ஓடை மற்றும் சாலை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அதிகளவில் அளிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள், பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாருதல் மற்றும் சீரமைப்புப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி, மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தினர். மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.



