திருவள்ளூர், ஜூன் 28 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் மாணவ, மாணவியர்கள், தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டார்கள்.
அதன் பின்னர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது. இப்பேரணியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்டு பேரணியில் சென்றார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் போதைப் பொருள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் மாதந்தோறும் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடத்தி போதைப் பொருட்களில் தடுப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதையில்லா மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒன்றிணைவோம் எனத் தெரிவித்துள்ளார்.