நாகர்கோவில், பிப். 18 –
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மாலையில் காவல்கிணறு பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மகேஷ் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் மகேஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்பட்டது.
இதை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இது குறித்து மகேசின் குடும்பத்தினருடன் பேசினர். அப்போது திருமணமாகி 8 மாதமே ஆனதால் எப்படி சாத்தியம்? என்று முதலில் உறவினர்கள் தயங்கினர். ஆனால் டாக்டர்கள் நிலைமை எடுத்துக் கூறினார்கள். மகேஷ் குடும்பத்தார் எடுக்கும் முடிவால் பிறருக்கு உயிர் கொடுக்க முடியுமென மகேஷின் மனைவியிடம் டாக்டர்கள் கூறினார்கள். பின்னர் மகேஷ் மனைவி கணவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
இதை அடுத்து ஆபரேஷன் மூலம் மகேசன் உடல் உறுப்புகளை தானமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். குமரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் மேற்பார்வையில் இதற்கான குழு அமைக்கப்பட்டு இன்று காலை இதற்கான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
அதன்படி மகேஷின் 2 கிட்னியில் ஒன்று திருச்சி மருத்துவமனைக்கும், மற்றொன்று காரைக்குடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தோல் மதுரை மருத்துவமனைக்கும், லிவர் (கல்லீரல் ) திருச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டது. கண் நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடல் உறுப்புகளை தானமாக கொண்டு செல்லும் வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் காவல்துறை சார்பில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் மகேஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



