திருப்பூர், செப்.04.
திருப்பூர் மாநகராட்சி எதிரில், BC, MBC, DNT மக்களுக்கு எதிராக PCR சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படும் புகார்களை தடுக்கக் கோரி பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இச்சட்டத்தின் கீழ் மேற்கண்ட சமூக மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவை மாநிலத் தலைவர் எஸ்.வி. பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், பனங்காட்டு படை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் PCR சட்டம் தொடர்பாக எழும் புகார்கள் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மக்களின் சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலப் பொருளாளர் திலகபாமா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மாநிலத் தலைவர் எஸ். கர்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். “சட்டம் அனைவருக்கும் சமம்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 7-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.



