தருமபுரி, செப்.19:
தருமபுரி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.21.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெங்களூருவில் இருந்து தனி ரயில் மூலம் தருமபுரி வந்த அவர், ரயில் நிலைய நுழைவாயில், முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் பேசிய பொது மேலாளர் ஆனந்த், தருமபுரி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் இந்த நிதியாண்டுக்குள் நிறைவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள், பொது மேலாளர் ஆனந்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கொரோனா காலத்துக்கு முன்பு இயக்கப்பட்ட கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் தருமபுரி–ஓசூர் வழியாக இயக்க வேண்டும், அம்ரித் பாரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த வேண்டும், மின்னணு அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.



