தருமபுரி, அக். 1:
தருமபுரி புதிய பேருந்து நிலைய விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ராஜகோபால் பேருந்து நிலையத்தை முடக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வணிகர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.
புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் போக்குவரத்து செலவு ஏற்படுவதுடன், வாகனங்களின் எரிபொருள் செலவும் அதிகரிப்பதாகவும், ஒரு நபர் சென்று வருவதற்கே சுமார் ரூ.100 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், புதிய பேருந்து நிலையத்தால் தருமபுரி நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்தை நம்பி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஏற்கனவே சட்டப்பேரவையில் பேசியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், புதிய பேருந்து நிலைய விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மாதங்களுக்குள் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.
எனவே, ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்காமல், பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக அழைத்து வெளிப்படையாக கருத்துகளை கேட்டறிந்த பின்னர் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.



