தருமபுரி, ஜூலை 03 –
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த கோடியூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, ஆதித்யாதி நவகிரகங்கள், ஸ்ரீ கருடாழ்வார் ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள், அருள்மிகு ஸ்ரீ கோடி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 20ம் தேதி கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.
இதை தொடர்ந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உட்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 10.45 மணிக்குமேல் 11.45 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ கோடி மாரியம்மன் உள்ளிட்ட கோயில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பாரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகுவிமர்சியாக நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது.
இதில் கோடியூர், அதியமான்கோட்டை, தேங்காய்மரத்துப்பட்டி, எர்ரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



