தருமபுரி – 22.08.2026
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. கணவரை பிரிந்து, தனது இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவரது இளைய மகன் சிவாஜிகணேசன், 25. பென்னாகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற சிவாஜிகணேசன், மீண்டும் வீடு திரும்ப 10 நாட்கள் ஆகும் என தாயிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி இரவு தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு, 11ஆம் தேதி முதல் அவரது செல்போன் அணைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மகனை தேடியுள்ளார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் பணியாற்றிய நிதி நிறுவனத்தில் விசாரித்தபோது, 11ஆம் தேதி காலையே வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு சிவாஜிகணேசன் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் தங்கமணி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தனியார் நிதி நிறுவன ஊழியர் சிவாஜிகணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.



