தஞ்சாவூர், ஜூலை 2 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி 4, 6 தேதிகளில் நடக்கிறது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயு மானவர் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1,248 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 48,817 ரேஷன் கார்டுகளில் உள்ள 75, 706 பயனாளர்களுக்கு அவர்களின் வீடுகளில் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே 4, 6 தேதிகளில் சனி, திங்கள்கிழமை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமை பொருள்களை விநியோகம் செய்திட உத்தரவு இடப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் வீடு தேடி குடிமை பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட 2 நாட்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களில் அவர்களின் வீடுகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



