நாகர்கோவில், ஜூன் 18 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நெல்கொள்முதலுக்கு 11 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் உரிய கட்டுமான வசதிகள் இல்லாததால் கடந்த கோடை காலத்தில் கும்பபூ சாகுபடி நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படாததுடன் மழையில் நனைந்து சேதமடைந்து.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் கன்னிப்பூ சாகுபடி நெல்மணிகளை செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் போது, மழைக்காலம் துவங்கும் என்பதால் இப்போதே, நெல்லை கொள்முதல் செய்து சேமிப்பதற்கு கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக இடங்களை தேர்வு செய்து, புதிய கட்டிடங்கள் கட்டி நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், தற்காலிக ஏற்பாடாக பிற துறைகளில் பயன்படுத்தப்படாமல் காலியாக கிடக்கும் குடோன்களையும், ஷெட் மற்றும் வளாகங்களையும் பயன்படுத்தலாம் என ஏற்கனவே அதிகாரிகள் மற்றும் பாசனத்துறை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்பட்டது.
தொடர்ந்து இது சம்பந்தமாக பாசனத்துறை நிர்வாகிகள் சேர்மன்.வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், ஜெனில்சிங், உறுப்பினர்கள் மாதவன்பிள்ளை, டோனிபெலிக்ஸ் உள்ளிட்டோரும் மீன்வளத்துறை முன்னாள் சேர்மன் சகாயம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அந்த வகையில், தாழக்குடி பகுதியிலும் இறச்சகுளம்- பேச்சாங்குளம் பகுதியிலும் தெள்ளாந்தி பகுதியிலும், இன்னும் பல்வேறு பகுதிகளிலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு குடோன்களும் – செம்பகராமன்புதூர் போன்ற பகுதிகளில் சர்வோதய சங்கத்திற்கு கட்டிடங்களும், சீதப்பால் போன்ற பகுதிகளில் பொதுப்பணித்துறை பழைய ஆய்வு மாளிகை போன்றவைகளும்
பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சிறு பராமரிப்பு பணி செய்து நெல் கொள்முதல் நிலையமாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு பாசன துறை நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



