நாகர்கோவில், நவம்பர் 12 –
டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உட்பட அனைத்து நகரங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்தது. நேற்று காலையிலும் இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. சுற்றுலா தளங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை நடத்தினர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். படகு தளத்திற்கு செல்பவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்களிலும் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


