சேலம், ஆக. 28:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
முதற்கட்டமாக கொண்டலாம்பட்டி மண்டலம், குமாரசாமிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் சமையல் அறை மற்றும் உணவின் தரத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். தினசரி உணவருந்த வரும் பொதுமக்களின் எண்ணிக்கை, உணவு விலை, தேவையான வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், உணவருந்த வந்த பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.67 கோடி மதிப்பில் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.105.25 கோடி மதிப்பில் 2.92 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
அதே பகுதியில் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு, அவற்றைத் தரம் பிரிக்கும் முறைகள் மற்றும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் சூரமங்கலம் மண்டலம், செவ்வாய்பேட்டை பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைவிடப்பட்ட, நலிவடைந்த மற்றும் காயமடைந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டு வரும் மையத்தின் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த மையத்தில் விலங்குகளுக்காக 10 அறைகள், மருத்துவ வசதி மற்றும் மருத்துவர் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து, தரமாக, உரிய காலத்திற்குள் நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்ய நீலம், துணை ஆணையர் மகேஸ்வரி, மாநகர நல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



