கன்னியாகுமரி, ஆக. 28 –
உத்தரகண்ட் மாநிலம் தேராதூண் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் ஸ்ரீவஸ்தவா(61). இவரது மனைவி அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி மின்சார வாகனத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
தூய்மையான போக்குவரத்து, குறைந்த கார்பன் உமிழ்வு, மற்றும் மின்சார வாகனங்கள் நீண்ட பயணங்களுக்கும் உகந்தவை என்பதை வெளிபடுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ந்நேதி ஸ்ரீநகரில் தொடங்கி இப்பயணம் ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடக உட்பட 12 மாநிலங்கள் வழியாக 4600 கி.மீட்டர் கடந்து இன்று கன்னியாகுமரியில் நிறைவுற்றது.
கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்தபின், அவதேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: “இந்தப் பயணம் இலக்கை அடைவதற்கானது மட்டுமல்ல. மின்சார வாகனங்கள் இந்தியா முழுவதும் நீண்ட தூரத்தை கடக்கக் கூடியவை என்பதை நிரூபிப்பதற்கானது. மூத்த குடிமக்களாகிய நாங்கள், வயது புதிய தொழில்நுட்பத்தை ஏற்கவும், சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கவும் ஒரு தடையாகாது என்பதை காட்ட விரும்பினோம். பயணத்தில் பல சவால்கள் இருந்தன. ஆனால் ஒவ்வொரு படியும் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியது. தூய்மையான போக்குவரத்தே எதிர்காலம். எங்கள் பயணம் பலரையும் பசுமையான பயணத்திற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று நம்புகிறோம். இந்த வரலாற்றுச் சாதனை, தனிப்பட்ட வெற்றி மட்டுமல்லாது இந்தியாவின் மின்சார வாகன இயக்கத்திற்கு முக்கியமான ஒரு அடையாளமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



