நாகர்கோவில், மே 25 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நிமிர் என்ற போக்சோ விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். போக்சோ குற்றங்கள் இல்லாத, குழந்தைகள் பாதுகாப்பாக வளரக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து கண்காணித்து வழிகாட்டி வருகிறது.
இதில் குறிப்பாக, பெற்றோர் இல்லாத குழந்தைகள், ஒரு பெற்றோர் மட்டுமே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், போதைப் பழக்கத்திற்கு ஆளான குழந்தைகள், குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களால் பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவர்கள், செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையான குழந்தைகள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர்கள் போன்ற பல்வேறு அபாய சூழ்நிலைகளில் இருந்த குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டது.
அதன் விளைவாக, பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 483 மாணவ மாணவிகள் மீண்டும் கல்வியுடன் இணைக்கப்பட்டு, அவர்களின் பள்ளிப்படிப்பு தொடர இந்த நிமிர் குழு உறுதி செய்தது. மேலும், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில் இருந்த மாணவர்களில், நிமிர் குழுவின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் மூலம் மீண்டும் கல்வியை தொடர்ந்த 172 மாணவ மாணவிகள், தற்போது நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
கல்வியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி இன்று (25.05.2026) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளையும், நிமிர் குழுவில் பணியாற்றிய போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான முழுமையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்த சமூக மாற்ற முயற்சியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய நிமிர் குழுவின் மேற்பார்வையாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் கோமதி மற்றும் 15 பெண் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் பாராட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் சிதம்பரதாணு மற்றும் ரெட் அகாடமி நிறுவனர் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்ததுடன், பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சி, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.



