மதுரை, செப்.08.
மதுரையில் கல்பதரு அறக்கட்டளை சார்பில் “கிரியேட்டிவ் ரீயூஸ் – கழிவுகளை பயனுள்ள மற்றும் செயல்பாட்டு படைப்புகளாக மாற்றுதல்” என்ற கருப்பொருளில் மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கழிவுகளை குறைத்தல், பொருட்களை மறுபயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 7 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் சேது ஐராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் திருக்குமரன் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார்.
இதே பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிகள் பிரதிஷ்கா மற்றும் அனுஜா ஆகியோர் தங்களது சிறப்பான படைப்புகளுக்காக சிறப்பு பாராட்டு விருதுகளைப் பெற்றனர். மாநில அளவிலான போட்டியில் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றிருப்பது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது.
“கழிவு என்பது குப்பை அல்ல; முறையாக மறுபயன்படுத்தினால் பயனுள்ள பொருளாகவும், புதிய படைப்பாகவும் மாற்ற முடியும்” என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான அக்கறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.



