திருப்பூர், ஜூன் 12 –
திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், திருவள்ளுவர் நகர், முத்துநகர், ஆத்து பாளையம் உள்ளிட்ட இடங்களில் செல்லும் நல்லாறு வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 147 வீடுகளை இடித்து அகற்றுவதற்கு வருகை தந்த பவானிசாகர் அணைக்கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வளத் துறை அதிகாரிகள், போலீசார் உடன் வந்தபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு. 2 வீடுகள் இடித்து அகற்றம்.
நல்லாற்றை பல அடி தூரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்டி பயன்படுத்தி வரும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஆக்கிரமிப்பை அகற்றிய விட்டு பின்னர் எங்களது வீடுகளை இடியுங்கள் எனக் கூறி ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம் -பரபரப்பு.
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 10 வது, 11-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், திருவள்ளுவர் நகர், முத்து நகர், ஆத்துப்பாளையம், சத்யா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் துவங்கி கருவலூர் அவிநாசி திருமுருகன் பூண்டி வழியாக அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளில் சென்று நஞ்சராயன் குளத்தை நிரப்பி இறுதியாக உபரி நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.
16 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள நல்லாறு ஒரு காலத்தில் நன்னீராகவும் இருந்துள்ளது. ஆற்றின் அருகே குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அமைந்ததால் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடை நீராக மாறிவிட்டது. நல்லா இரு பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆறு 90 சதவீதம் சுருங்கி குறுகலாக காணப்படுகிறது. ஏறத்தாழ 150 அடி முதல் 250 அடி அகலம் வரை சென்று கொண்டிருந்த நல்லாறு தற்போது சாக்கடை ஆறாக ஆக்கிரமிப்புகளால் குறுகி செல்கிறது. பல இடங்களில் குழாய்களை பதித்து தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக நல்ல ஆற்றில் கலக்கிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நல்லாற்றின் ஓடைப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 147 வீடுகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மாற்றாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் தருவதாக கூறினர். ஆனால் அதில் வசிக்கக் கூடிய மக்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் இடத்தை தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு செட்டிபாளையம் பகுதியில் 39 நபர்களுக்கு தலா 2 லட்சம் பணத்தை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதில் 12 பேர் மட்டும் பணத்தை செலுத்தினர். ஆனால் அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு செல்லாமல் ஓடை புறம்போக்கு பகுதியில் உள்ள வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்து இங்கேயே இருந்துள்ளனர்.
இதனிடையே பவானிசாகர் அடைக்கோட்டத்திற்கு பணியாற்றும் பொதுப்பினை துறைக்கு உட்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் இன்று நல்லற்றின் ஓடையில் புறம்போக்கில் ஆக்கிரமித்து இருக்கக்கூடிய வீடுகளை அகற்றுவதற்காக போலீசார் உதவியுடன் வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 45 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு வீடு வேண்டாம் மாற்றாக இடம் வழங்குங்கள் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
நல்லாற்றின் ஒருபுறத்தில் வீடுகள் கட்டி மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். மறுபுறத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று காம்பவுண்ட் சுவரை நல்லாற்றை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எங்களது வீடுகளில் இடிப்பதற்கு முன்பாக மற்றொரு கடையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர் ஆக்கிரமிப்பு அகற்றிய பின்னர் எங்களது வீடுகளை இடியுங்கள் எனக் கூறி ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் நல்லாற்றின் கரை ஓரம் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், போலீசார் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லாற்றின் இரு கரைகளும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் மிகவும் சுருங்கிப்போயுள்ளது. நல்லாற்றின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்காக, தமிழக நீர்வளத்துறை (WRD) உலகளாவிய இயற்கை நிதியத்துடன் (WWF-India) இணைந்து ட்ரோன் (Drone) மூலம் நவீன ஆய்வு நடத்தத் திட்டமிட்டு அதுவும் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றின் இரு புறங்களிலும் உரிய ஆய்வை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.



