திருப்பத்தூர், ஜூன் 30 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் என்எம்எஸ் கல்வி அறக்கட்டளை, தினத்தந்தி நாளிதழ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, வடமலையான் மருத்துவமனை குழுமங்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு மொத்தம் 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று பேர் வெற்றி பெற்ற நிலையில் வெற்றி பெற்ற அனைவரும் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விருதுநகர் மாவட்டம் செல்ல இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை என்எம்எஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு என்எம்எஸ் கல்வி அறக்கட்டளையின் குசி. தங்க மாரியப்பன் மற்றும் தங்கபாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார். ஐடிசி செல்வம், சீனிவாசன், பாண்டியராஜன், கண்ணன், சேகர், அருள்மொழி, கார்த்தி, கண்ணன், மூர்த்தி, வடிவேல் சுப்பிரமணியன், ரவிந்திரன் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஏவிஎஸ் மாரிமுத்து நாடார், மணலி தங்கம் நாடார், மோகன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.