ஈரோடு, ஆக. 25:
ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டு நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 256 அருந்ததியர் குடும்பங்கள் 80 சதுர அடி பரப்பளவில் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2023 பிப்ரவரி 25-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பழைய வீடுகளை அகற்றி 400 சதுர அடி பரப்பளவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை நிலத்தின் எல்லையை நிர்ணயிக்கும் டிஜிட்டல் சர்வே (ETS) மேற்கொள்ளப்படாததுடன், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாததால் திட்டம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
எனவே, வாரியத்திற்குச் சொந்தமான 2.68 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முதலமைச்சரின் வாக்குறுதியின்படி 256 குடும்பங்களுக்கும் 2 ஆண்டுகளுக்குள் 400 சதுர அடி பரப்பளவில் G+2 அல்லது G+3 அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் மாதாந்திர வாடகைத் தொகை அல்லது தற்காலிக மாற்று குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.



